நிதிநிலை மேம்பட ஊழலை ஒழிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் யோசனைகள்

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். இந்த வெள்ளை அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகமாக இருக்கக்கூடாது என்றும், சொல்லில் மட்டுமல்லாமல் செயலிலும் நிதி நிலைமையை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதி அமைச்சர்களாக இருந்த பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர், நிதி மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும், பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாகவும் பேசி வந்தனர். ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக அரசு, கடன் வாங்குவதிலும், தேவையற்ற ஆடம்பர செலவுகளிலும் கவனம் செலுத்தியதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கடன் வாங்குவதில் தவறில்லை என்றாலும், திமுக அரசு கடன் பணத்தை இலவச திட்டங்களுக்கும், வீண் விளம்பரங்களுக்கும் வாரி இறைத்ததாகவும், நிர்வாகத்தில் ஊழல் நிறைந்திருந்ததால் கடன் சுமை அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பியபோது, அமைச்சர்கள் வேறு புள்ளிவிவரங்களை கூறி பேச்சை திசை திருப்பியதாகவும், தன்னை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, பதவியேற்ற 37வது நாளில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மின் வாரியம், போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து, தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் மட்டும் சுமார் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ. 1,28,934 கடன் சுமை உள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் உள்ள புள்ளி விவரங்கள் ஏற்கனவே அறிந்தவைதான் என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் த.வெ.க. அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இந்த அதிருப்தியிலிருந்து மக்களை திசை திருப்பவே வெள்ளை அறிக்கை நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். எனினும், உண்மை வெளிவந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும், சொந்த வரி வருவாயை அதிகரிக்கவும் என்ன திட்டங்கள் வைத்துள்ளோம் என்பதை வரும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும். நிர்வாகத்தில் ஊழலை ஒழித்தல், கனிமவளக் கொள்ளையை தடுத்தல், பொதுத்துறை நிறுவனங்களை திறம்பட நிர்வகித்தல், கடன் பணத்தை உள்கட்டமைப்புக்கு மட்டும் செலவழித்தல் ஆகியவற்றின் மூலம் நிதி நிலைமை மேம்படும், கடன் சுமை குறையும் என்றும் அவர் யோசனைகளை வழங்கியுள்ளார். இனி ஆண்டுதோறும் நிதி நிலையை மேம்படுத்தவும், கடன் சுமையைக் குறைக்கவும் என்னென்ன செய்தோம் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version