அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 9-வது சீசன் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு, கோவை புதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். திரைப்பட நடிகை அம்பிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணத்தைப் போற்றுவதுடன், இளைஞர்களிடையே கைத்தறி ஆடைகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மாடல்கள் பல்வேறு வகையான கைத்தறி ஆடைகளை அணிந்து ரேம்ப் வாக் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். திமுக-பாஜக இடையே நெருக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அரசியல் கூட்டணி உருவாகும்போது அது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது. அரசியல் சூழல் உருவாகும்போது அதுகுறித்து பார்க்கலாம். கூட்டணி உருவாவதற்கு முன்பாகவே நீங்களே உருவாக்கிவிடுவீர்கள் போல இருக்கிறது' என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வை பாஜக கொண்டு வரவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததாகவும் வானதி சீனிவாசன் கூறினார். தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய விரும்பினால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். நீட் தேர்வில் இருந்த சில பிரச்சினைகளை மத்திய அரசு சரிசெய்துள்ளதாகவும், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களும், பெற்றோர்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அரசு பள்ளி மாணவர்களும் அதிக அளவில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். 'நீட் தேர்வில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்கான ஆதாரங்களுடன் மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கலாம். அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலுக்காக தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்; ஆனால் சமூகம் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளது' என வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியின் 3 மாத செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன், அரசு அதன் போக்கில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், பட்ஜெட்டிலும் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திருப்பூர் மாவட்டத்தில் தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் அவர் பேசினார். கடந்த 3 மாத காலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். 'நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமே மாறியிருக்கிறார்களே தவிர, வேறு எந்த நிலையும் மாறவில்லை' எனவும் வானதி சீனிவாசன் விமர்சித்தார்.

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் தமிழக சபாநாயகர் பங்கேற்றது தொடர்பாக பேசிய வானதி சீனிவாசன், சபாநாயகர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது கிறிஸ்தவ மத நம்பிக்கையை வெளிப்படுத்தி வருவதாகக் கூறினார். நிதியமைச்சரும் பேசும்போது தமிழ் மொழியைவிட தனது கிறிஸ்தவ மதத்தை உயர்த்திப் பேசுவதாக குறிப்பிட்ட அவர், இதனால் கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களின் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்தார். அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்று கூறினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் இந்து மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களை மட்டும் பிற்போக்குவாதிகள் என்று கூறிவிட்டு, பிற மத நம்பிக்கைகளை வெளிப்படுத்துவது குறித்து கேள்விகள் எழுகின்றன என்றும் அவர் கூறினார். கருக்கலைப்பு தொடர்பான விவகாரங்களில் பெண்களின் மனநிலை மற்றும் உடல்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டது குறித்தும் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்தார். மத்திய அரசு ஏற்கனவே திட்டத்தை ஏன் நிராகரித்தது, தற்போது மீண்டும் ஏன் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும் என்றார். திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையான டி.பி.ஆர். (DPR) அறிக்கையைச் சரிசெய்து, கோவைக்கு மெட்ரோ திட்டம் வருவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 'ஒரே மாதிரியான திட்ட அறிக்கையை மீண்டும் மீண்டும் அனுப்பினால் ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கும்' என்று கூறிய அவர், புதிய அரசு தனிக்குழுவை அமைத்து மதுரை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளுக்கு தகுதியான, முழுமையான திட்ட அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார். அவ்வாறு செய்தால் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்படும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version