காணாமல் போன கட்சிக்கு 10 சீட், கிளை இல்லாத கட்சிக்கு 8 சீட்… எங்களுக்கு? – வைகோ ஆவேசம்!

முதல்வர் விஜய்யின் வருகை குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட வைகோ, முதல்வர் விஜய் தனது வீட்டிற்கு வருவார் என கனவிலும் நினைக்கவில்லை என்றும், அது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் தெரிவித்தார். தனக்கு பெரிய பதவியோ, பெரிய கட்சியோ இல்லை என்றும், கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், முதல்வர் விஜய்யிடம் இருந்து தான் 50 கோடி ரூபாய் வாங்கியதாக பரவும் வதந்திகளை அவர் மறுத்தார். மக்களின் வாழ்வாதாரங்களுக்காக போராடியது போல வேறு எந்த கட்சியும் போராடியதில்லை என வைகோ கூறினார். முல்லைப்பெரியாற்றை காக்க 11 ஆண்டுகள் போராடியுள்ளதாகவும், அதுகுறித்து எந்த கட்சியும் நடைப்பயணம் நடத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது மகன் துரை லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்ததாகவும், அண்ணாசாலையில் அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருப்பதாகவும் கடந்த ஏழு மாதங்களாக ஒருவரால் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வைகோ கடுமையாக விமர்சித்தார். யார் அவரை பேச வைக்கிறார்கள், யார் இயக்குகிறார்கள் என்பதை 32 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தனக்கு யூகிக்க முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்றும், தான் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருந்ததாகவும், கனவிலும் வஞ்சகம் நினைத்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்து பேசிய வைகோ, தங்களை விட பலம் குறைந்த கட்சிகளுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டதாகவும், கிளைகள் கூட இல்லாத கட்சிக்கு 8 இடங்களும், காணாமல் போகும் நிலையில் இருந்த கட்சிக்கு 10 இடங்களுடன் ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தங்களுக்கு அவை கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். இது குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் திமுகவை ஒரு சொல் கூட தவறாக பேசியதில்லை என்றும், ஆனால் அவர்களுடன் இருந்த கட்சிகள் திமுகவை விமர்சித்ததாகவும் வைகோ குறிப்பிட்டார். பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவை அமைச்சரவையில் ஏற்ற முடிவு செய்த திமுகவிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என்றும், இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றும், இது அரசியல் மோசடி என்றும் அவர் பேசினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version