இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்ட விதம் மற்றும் அதற்கு அவர் காட்டிய எதிர்வினை குறித்து முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் இந்திய அணியின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த டி20 தொடரில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி விளையாடினார். ஆனால், ஐந்தாவது போட்டியின் போது வைபவ் நீக்கப்பட்டு மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
முன்னாள் வீரர் அம்பதி ராயுடு இதுகுறித்து பேசுகையில், 'வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றமடைந்த விதத்தைப் பார்க்கும்போது, அவர் விளையாடவில்லை என்ற செய்தி அவருக்கு முந்தைய நாள் இரவே சொல்லப்படவில்லை என்பது தெளிவாகிறது. சஞ்சு சாம்சனை விளையாட வைக்கும் முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம். அணி நிர்வாகம் இளம் வீரர்களைச் சுற்றியுள்ள அழுத்தங்களைக் குறைத்து, அவர்களைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் விளையாடக் கூடிய ஒரு திறமையான வீரரை நாம் சரியாகப் பாதுகாக்கவில்லை' என்று தனது கருத்தை தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் இந்த முடிவை முற்றிலுமாக எதிர்த்துள்ளார். அவர் கூறுகையில், 'சஞ்சு சாம்சன் அணிக்கு வந்ததில் எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், வைபவ் 3வது இடத்தில் விளையாடியிருக்க வேண்டும். அவர் ஏமாற்றத்துடன் மைதானத்தில் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்ப்பது வேதனையாக உள்ளது. முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டாரா என்பதை அறிய அவருக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும் கவாஸ்கர், 'அவர் விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் பேட்டின் நடுப்பகுதியில் பந்து பட்டு சிக்சர்கள் பறந்தன. எவ்வித எட்ஜ்களும் இன்றி சுத்தமான ஷாட்களை அவர் ஆடினார். 15 வயது சிறுவனை வெறும் 3 போட்டிகளுக்குப் பிறகு அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடினமான ஒன்றாகும். மூத்த வீரர்கள் யாராவது அவரது தோளில் கைபோட்டு, இதுவே கடைசி முடிவு அல்ல என்று ஆறுதல் கூற வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியதற்கான காரணம் குறித்து, 'நான் ஒருத்தன் தான் வலது கை பேட்ஸ்மேன்' என ஸ்ரேயாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்ததாக ஜூலை 23 அன்று தொடங்க உள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பீர் பயிற்சியாளர் குழுவில் குழப்பம் நிலவுவதாகவும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐபிஎல் அணிக்கு தாவும் நபர் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது இந்திய அணியின் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

