11 பந்துகளில் அரைசதம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ரகசியம் அம்பலம்!

முத்தரப்பு ஏ தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து வைபவ் சூர்யவன்ஷி மாபெரும் சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் முதல் சில போட்டிகளில் சராசரியாக ஆடிய அவர், இறுதிப்போட்டியில் 94 ரன்கள் குவித்து இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

தம்புள்ளையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் தந்தார். வெறும் 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 94 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இந்தியா ஏ அணி 377 ரன்கள் குவித்து, 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, மிகக் குறைந்த வயதில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ், இத்தொடரின் முதல் 4 போட்டிகளில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து சற்று தடுமாறினார். இந்த இறுதிப் போட்டியில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

தனது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்திற்குப் பின் பேசிய வைபவ், தனது தடுமாற்றம் குறித்து இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கருடன் விவாதித்ததாகக் கூறினார். 'நான் ரன்கள் எடுக்க தடுமாறிய போது, கனிட்கர் சாருடன் பேசினேன். அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்து, நீ உனது இயல்பான ஆட்டத்தை விளையாடு, அதிகமாக எதையும் யோசிக்காதே' என்று கூறினார். அந்த ஒற்றை அறிவுரை எனக்குள் பெரும் உத்வேகத்தை தந்தது. அதன் பிறகு நான் எந்த அழுத்தமும் இன்றி விளையாடினேன்' என்று வைபவ் கூறினார்.

இதற்கு முன்னதாக விஜய் ஹசாரே தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 85 பந்துகளில் 190 ரன்கள் குவித்த வைபவ், ஏபி டி வில்லியர்ஸின் அதிவேக 150 ரன்கள் (59 பந்துகளில்) சாதனையை முறியடித்திருந்தார். தற்போது, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய முதன்மை அணியில் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் நடைபெற உள்ள அயர்லாந்து தொடரில் அவர் களம் இறங்கினால், மிகக் குறைந்த வயதில் இந்திய தேசிய அணிக்காக விளையாடிய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version