தோல்விகளுக்கு தயாராகுங்கள்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பேடி அப்டன் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திரமாக கருதப்படும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் அபார வளர்ச்சி மற்றும் திடீர் புகழை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதில் கவனம் செலுத்தி, அவரை தோல்விகளுக்குத் தயார் செய்ய வேண்டும் என இந்திய அணிக்கு மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் அறிவுறுத்தியுள்ளார். 2011 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் மனநல ஆலோசகராக இருந்த பேடி அப்டன் வழங்கியுள்ள இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரையும் கவர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இலங்கை மண்ணில் நடைபெறும் முத்தரப்பு தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பி வருகிறார். மேலும், கடந்த போட்டியில் இலங்கை வீரரைத் தள்ளிவிட்டு தேவையில்லாத சர்ச்சையிலும் சிக்கினார். 15 வயதே ஆன ஒரு சிறுவன் திடீர் புகழ், பாராட்டு மற்றும் அதே வேகத்தில் வரும் விமர்சனங்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்வது மிகவும் கடினமானது.

இது குறித்து பேசிய பேடி அப்டன், 'முதலில் நான் செய்யும் காரியம், வைபவ்வை தோல்விகளுக்குத் தயார் செய்வதுதான். ஒருவேளை அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தால், அவரது மனநிலை எப்படி இருக்கும்? அதை அவர் எவ்வாறு கையாளுவார்? தோல்விகள் என்பது விளையாட்டில் இயல்பானது. அது இப்போதோ அல்லது பின்னரோ கண்டிப்பாக வரும். அதற்கு அவரை நாம் தயார்படுத்த வேண்டும்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 5-6 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அடுத்த சச்சின், அடுத்த கோலி அல்லது அடுத்த தோனி என்று புகழப்பட்ட பல இளம் வீரர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் சாதாரண உள்நாட்டு வீரர்களாக மாறிவிட்டனர். தங்களைச் சுற்றி எழும் எதிர்பார்ப்புகளையும், திடீர் புகழையும் அவர்களால் சரியாகக் கையாள முடியவில்லை என்பதே அதற்குக் காரணம். தற்போது வைபவ்விற்கு இத்தகைய நெருக்கடிகளைச் சமாளிக்க யார் உதவி செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. இளம் வயதில் எழும் திடீர் புகழை கையாளுவதே ஒரு வீரருக்கு மிகவும் சவாலானது' என எச்சரித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version