முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு எதிராக திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் பேசியதால், நள்ளிரவில் அவர் கைது செய்ய முயன்ற சம்பவம் தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ‘ஜென் இசட் திமுக’ (Gen Z DMK) இளம் தலைமுறையினரின் மாநாட்டில் பேசிய திமுக சமூக வலைத்தள நிர்வாகி, தற்போதைய தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகப் போக்கு மற்றும் சட்டமன்ற உத்திகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக தவெக தகவல் தொழில்நுட்ப அணியினர் அளித்த புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நள்ளிரவு 12 மணியளவில் அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்று அதிரடியாகக் கைது செய்ய முயன்றனர். முன் அறிவிப்போ, முறையான வாரண்டோ இல்லாமல் காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்ய முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும், திமுக பகுதி மற்றும் வாலிபர் அணியினரும் காவல்துறையினரின் வாகனங்களை முற்றுகையிட்டு விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது. கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் – அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா? நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள். கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது' என்றும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version