உதயநிதியை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது: மாணிக்கம் தாகூர்

சென்னை: திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் துணை-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'பதவி ஆசைக்காக எந்த வார்த்தையும் சொல்லாமல் சென்ற காங்கிரஸ் கட்சியை இனி ஒருபோதும் சேர்க்கக்கூடாது. கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு திமுகவினரின் உழைப்பே காரணம். தமிழக மக்கள் காங்கிரஸுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்' என்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மாணிக்கம் தாகூர் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், 'உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும். உதயநிதியை துணை முதல்வராக்க தோளில் சுமந்து துணை நின்ற கட்சி காங்கிரஸ். அதை மறந்ததே நன்றி மறந்த செயல். அவர் காங்கிரஸ் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. உதயநிதியின் வன்மம் வெளிப்பட்டுவிட்டது' என்று சாடினார்.

மேலும், 'விஜய் முதல்வராக வரக்கூடாது என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அவர் துடித்தார். இதை நீங்கள் சி.வி. சண்முகத்திடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்' என்றும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார். எல்லாவற்றிற்கும் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version