அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழா டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனிலிருந்து காணொலி வாயிலாக உரையாற்றினார். இது இருநாட்டு உறவில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
தனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியை தனக்கு மிகவும் பிடிக்கும், அவர் ஒரு சிறந்த தலைவர் மற்றும் தனது மிக நெருங்கிய நண்பர் என்றும் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார். இந்தியாவை அமெரிக்கா 100 சதவீதம் நம்பலாம் என்றும், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை புதிய உச்சங்களைத் தொட்டு வரலாற்று சாதனை படைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகன் நான் என்றும், அமெரிக்க வரலாற்றிலேயே மிகச் சிறந்த வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ வலம் வருகிறார் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இந்த விழாவில் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். தான் இந்தியாவிற்கான தூதராக பொறுப்பேற்று வந்த ஐந்து மாதங்களிலேயே இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான வரைவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

