அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதிபர் டிரம்ப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் படிப்பை முடித்த பிறகு, அங்கேயே வேலை பார்ப்பதற்கு இனி ரூ.96 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்களை ஈர்த்து வருகின்றன. இந்தச் சூழலில், மாணவர் விசாக்கள் மீதான கடுமையான சோதனைகள் மற்றும் ஹெச்1பி வேலை விசாவுக்கான கட்டண உயர்வு உள்ளிட்ட பல குடியேற்ற நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இது அமெரிக்காவில் கல்வி பயிலவும், பணியாற்றவும் எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள், பட்டம் பெற்ற பிறகு ஓராண்டு வரை தங்களது துறை சார்ந்த வேலைகளில் தங்கிப் பணியாற்றலாம். குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் (STEM) படிப்புகளை முடித்த மாணவர்கள் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற முடியும். இந்த வசதிக்காக கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு தான், அதிபர் டிரம்ப் தற்போது கட்டணத்தை விதிக்க பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த முன்மொழிவு குறித்து உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த பிரம்மாண்டமான கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பது குறித்தும் அதிகாரிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
இருப்பினும், இந்த முன்மொழிவு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அமெரிக்காவில் வேலை தேடும் சர்வதேச மாணவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நிதித் தடையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இது அவர்களின் கனவுகளைச் சிதைக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தற்போது 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெளிநாட்டு மாணவர் குழுக்களில் இந்தியர்களே மிகப்பெரிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கட்டண அறிவிப்பு இந்திய மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் பணிபுரியும் கனவுகளுடன் செல்லும் மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

