உங்கள் டாய்லெட்டில் உள்ள மஞ்சள் கறைகளை இனி கை வலிக்கத் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. எந்தவித சிரமமும் இன்றி நொடிப்பொழுதில் அவற்றை எப்படிப் போக்குவது என்று பார்ப்போம்.
டாய்லெட் பேசினை எப்போதும் பளிச்சென்று சுத்தமாக வைத்திருப்பது பலருக்கும் ஒரு பெரும் சவாலான காரியமாகவே உள்ளது. இதற்காகக் கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த இரசாயன திரவங்களோ அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அமிலங்களோ தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் சாதாரண வெள்ளை வினிகரே இதற்குப் போதுமானது. தண்ணீர்த் தேக்கத்தால் ஏற்படும் மஞ்சள் கறை, உப்புக்கறை, பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் காளான்களை வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் எளிதாகக் கரைத்துவிடும்.
டாய்லெட்டை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்?
கறைகள் மற்றும் பாக்டீரியாக்கள் படியாமல் இருக்க வாரத்திற்கு ஒருமுறை டாய்லெட்டைச் சுத்தம் செய்வது அவசியம். ஒருவேளை டாய்லெட்டைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள் என்றால், தினமும் ஒருமுறை விரைவாகச் சுத்தம் செய்வது நல்லது.
சில முக்கிய எச்சரிக்கைகள்
வினிகர் கொண்டு சுத்தம் செய்யும்போது, குளியலறை கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்து, நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். வினிகர் பாதுகாப்பானது என்றாலும், அது சருமத்தில் படும்போது சிலருக்கு வறட்சி அல்லது அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே, கைகளில் கையுறைகளை அணிந்துகொள்வது நல்லது. சமையலுக்குப் பயன்படுத்தும் சாதாரண வினிகரை அப்படியே பயன்படுத்தலாம். ஒருவேளை கடைகளில் கிடைக்கும் 5% கிளீனிங் வினிகரை வாங்கினால், அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும்.
சுத்தம் செய்யத் தேவையான பொருட்கள்
வெள்ளை வினிகர், டாய்லெட் பிரஷ், டிஷ்யூ பேப்பர் / பேப்பர் டவல், பேக்கிங் சோடா.
வினிகர் கொண்டு டாய்லெட்டைச் சுத்தம் செய்யும் முறை
டாய்லெட் பேசினுக்குள் சுமார் 2 கப் வினிகரை ஊற்றவும். கறைகள் மற்றும் அழுக்குகள் நன்றாகக் கரைவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். அதன் பிறகு, டாய்லெட் பிரஷ் கொண்டு பேசினின் உட்புறம் மற்றும் விளிம்புகளுக்குக் கீழே நன்றாகத் தேய்த்துக் கழுவி, ஃப்ளஷ் செய்யவும்.
டாய்லெட்டில் உள்ள வட்டக் கறைகளை நீக்க
தண்ணீர் தேங்கி நிற்கும் மட்டத்தில் ஏற்படும் வட்டக் கறைகளை நீக்க, முதலில் டாய்லெட்டின் பின்புறம் உள்ள வாட்டர் வால்வை மூடி, ஃப்ளஷ் செய்து தண்ணீர் மட்டத்தைக் குறைத்துக் கொள்ளவும். டிஷ்யூ பேப்பர்களை வினிகரில் நன்றாக நனைத்து, கறைகள் உள்ள வட்டப் பகுதியில் அப்படியே அடுக்குகளாக ஒட்டி வைக்கவும். 30 நிமிடங்கள் ஊறிய பிறகு, அந்த பேப்பர்களை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடவும். இப்போது வாட்டர் வால்வைத் திறந்துவிட்டு, பிரஷ்ஷால் தேய்த்து ஃப்ளஷ் செய்தால் கறைகள் மாயமாய் மறைந்துவிடும்.
மிகவும் பழமையான விடாப்பிடி கறைகளை விரட்ட என்ன செய்வது?
டாய்லெட்டில் வினிகரை ஊற்றிய பிறகு, அதனுடன் அரை கப் முதல் 1 கப் பேக்கிங் சோடாவைத் தூவவும். இரண்டும் வேதிவினை புரிந்து நுரைத்து வரும். 15 நிமிடங்கள் ஊற விட்டு, பிரஷ்ஷால் நன்றாகத் தேய்த்துக் கழுவினால், எவ்வளவு பழமையான கறையாக இருந்தாலும் காணாமல் போய்விடும். இன்னும் கடுமையான கறைக்கு 'பியூமிஸ் ஸ்டோன்' (Pumice Stone) எனப்படும் தேய்க்கும் கல்லைத் தண்ணீரில் நனைத்து, கறை உள்ள இடத்தில் மெதுவாகத் தேய்க்கலாம்.

