தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து, மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் எந்தெந்த பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன என்பது குறித்த விரிவான தகவல்களை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது வீடியோவில், "சுமார் 30 கல்லூரிகளில் உள்ள காலியிடங்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி-க்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இக்கல்லூரியில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு, மாணவர்கள் அதிகம் விரும்பாத சில பாடப்பிரிவுகளில் இடங்கள் இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "மாணவர்கள் அதிகம் விரும்பும் மெக்கானிக்கல், சிவில், பயோடெக், பயோமெடிக்கல் போன்ற பாடப்பிரிவுகளில் எஸ்.டி பிரிவினருக்கு காலியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், 90 முதல் 95 சதவிகித இடங்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. எஸ்.டி பிரிவினருக்கு சில இடங்களில் மட்டுமே இடம் இருக்க வாய்ப்புள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் சி.ஐ.டி கல்லூரி இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடம்பெறாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அது தனியார் கல்லூரியாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் கலந்தாய்வுக் குறியீடுகளை கவனமாகப் பார்க்க வேண்டும். சி.ஐ.டி கல்லூரியில் இரண்டாம் சுற்றில் இடங்கள் இருந்தால், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகளில் எஸ்.இ, எஸ்.டி மாணவர்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் இடங்கள் இருக்கலாம். மற்ற அனைத்து சாதி மாணவர்களும் இந்த கல்லூரியில் இடங்களை எதிர்பார்க்க வேண்டாம், ஏனெனில் இங்கு கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.
பி.எஸ்.ஜி ஐ.டி கல்லூரியைப் பொறுத்தவரை, எஸ்.டி, எஸ்.இ, எஸ்.சி.ஏ போன்ற பிரிவினர் மட்டுமே முயற்சி செய்யலாம். இங்கு மெக்கானிக்கல், சிவில் போன்ற பாடப்பிரிவுகளில் சில காலியிடங்கள் இருக்கலாம். மற்ற பாடப்பிரிவுகளில் இந்த பிரிவினருக்கு இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
இதேபோல், ஜி.சி.டி கோயம்புத்தூர் கல்லூரியிலும், மேற்குறிப்பிட்ட மூன்று சாதிப் பிரிவினரைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் இருக்கும். அதுவும் மெக்கானிக்கல், சிவில் போன்ற பாடப்பிரிவுகளில் மட்டுமே இந்த வாய்ப்புகள் அமையும். எம்.பி.சி பிரிவினருக்கு, புரொடக்ஷன் இன்ஜினியரிங், சிவில், பயோடெக் போன்ற பாடப்பிரிவுகளில் சுமார் 102 இடங்கள் காலியாக இருக்க வாய்ப்புள்ளது.
ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரியில் சுமார் 80 முதல் 90 சதவிகித இடங்கள் நிரம்பியிருக்க வாய்ப்புள்ளது. இங்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கு ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்.

