வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் கேட்ட விவகாரத்தில், தவெக ஒன்றிய செயலாளரின் பதவி பறிக்கப்பட்டதுடன், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியம்பாடி புதூர், நெல்வாய், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கணியம்பாடி கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள், கடந்த 22ஆம் தேதி செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. மாமூல் கொடுக்கவில்லை என்றால் தொழில் செய்ய முடியாது என மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் சலசலப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், உரிமையாளர்களை சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர்-திருவண்ணாமலை நெடுஞ்சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். புகாருக்குள்ளான தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி, தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.விஜயகுமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.விஜய் மோகன் வெளியிட்டுள்ளார்.

