திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விவகாரம்: ஐடி விங் விளக்கம்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குறித்த தவறான செய்திகளுக்கு அக்கட்சியின் ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதாக இருந்தது.

துரைமுருகன் சற்று தாமதமாக அறிவாலயம் வந்தபோது, அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல யாரும் வெளியில் வராததால், அவர் சோகமான முகத்துடன் காரில் ஏறித் திரும்பிச் சென்றதாக செய்திகள் பரவின. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளின் ஒரு பகுதியாக, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகனை மாற்ற முயற்சிகள் நடப்பதாகவும், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவரால் தீவிரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், 'கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் குறித்து, சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்திகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைக் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்' என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும், 'காணொளிகளை வெட்டி ஒட்டி, தாமாகவே ஒரு பொய்க் கதையை உருவாக்கி செய்தியாக வெளியிடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். நடைபெறாத ஒரு விஷயத்தைத் திணித்து, இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை' என்றும் திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version