திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கான உகந்த நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாதத்திற்கான பௌர்ணமி திங்கட்கிழமை இரவு 11.05 மணிக்கு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு 10.44 மணிக்கு நிறைவடைகிறது. இந்த காலக்கட்டத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பக்தர்களுக்கு பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலர் என்.ஜெயந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், செப்டம்பர் 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதே நாளில், திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை – விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயிலும் மேற்கூறிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்கள் தலா 8 பெட்டிகளைக் கொண்டதாக இயக்கப்படும் என்றும், இது பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதிசெய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

