திருவண்ணாமலையில் மினி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்: பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலையில் மினி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் மினி பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களின் மிரட்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களும் பக்தர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

திருவண்ணாமலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டு, திண்டிவனம் சாலையில் புதிய பேருந்து நிலையம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு மாறியதால், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு செல்வது எப்படி என்ற குழப்பத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் வசதிக்காக மினி பேருந்து சேவை போக்குவரத்து தொடங்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே, மினி பேருந்துகளின் சேவை தங்களது தொழிலை பாதிப்பதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், வட்டார போக்குவரத்து அலுவலகம் மினி பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்து, அனுமதிப் பத்திரங்களையும் வழங்கியது. நகரில் சுமார் 40க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை நகரின் முக்கிய பகுதிகளுக்கும், 25 கிலோமீட்டர் சுற்றளவுக்கும் இயக்கப்படுகின்றன. வெறும் 10 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படும் இந்த மினி பேருந்துகளுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது.

மினி பேருந்துகளின் இந்த வளர்ச்சி, ஆட்டோ ஓட்டுநர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், அடிக்கடி மினி பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி பேருந்துகளை அங்கிருந்து வெளியேற்றும்படியும், இல்லையெனில் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து விடுவோம் என்றும் சில ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த தொடர் மிரட்டல்களால், மினி பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, அனைத்து மினி பேருந்துகளையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாகவும், பேருந்து நிலையத்திற்குள் வரக்கூடாது, பயணிகளை ஏற்றக்கூடாது, மீறினால் பேருந்துகளை உடைப்போம் என்று மிரட்டுவதாகவும், பயணிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மல்லவாடி, அருணை கல்லூரி, அரசு கல்லூரி, கிரிவலபாதை, எஸ்கேபி கல்லூரி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளை இயக்குவதாகவும், அரசு கல்லூரியில் பேருந்தை நிறுத்தினாலும் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், மாலை 6 மணிக்கு மேல் புதிய பேருந்து நிலையத்திற்குள் வரக்கூடாது என்றும் மிரட்டப்படுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மினி பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்தனர். தீர்வு கிடைக்கும் வரை பேருந்துகளை இயக்க மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என மினி பஸ் ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அரசு விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர், இது தொடர்பாக காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மினி பஸ் ஊழியர்கள் தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பேருந்துகளை எடுத்துச் சென்றனர். ஆனாலும், தீர்வு காணும் வரை மினி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்திருந்தனர். இந்த திடீர் போராட்டத்தால், மினி பேருந்துகளை நம்பியிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால், கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சார்பாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிரிவலம் செல்வதற்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுவதை கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version