திருவள்ளூர் அடுத்த கொட்டையூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டையூரில் செயல்பட்டு வரும் இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது.
மாணவர்கள் உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவரின் உணவில் பல்லி விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அனைவரும் உண்பதை நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, மூன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திமுக ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், தவெக ஆட்சியின் போது விரிவாக்கம் செய்யப்பட்டு 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை, திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், சுவையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், திட்டம் தொடங்கி இரண்டு நாட்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

