சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிப் பணிகளுக்காக அரசு சார்பில் புதிய கார்கள் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு மாதம் ₹75,000 வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள், மாநிலத்தின் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி அரசு கார்கள் வேண்டாம் எனத் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ஆளுங்கட்சியான த.வெ.க-வின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவதை ஆடம்பரமாகப் பார்க்கக் கூடாது என்றும், எளிய பின்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தொகுதி முழுவதும் சென்று சேவையாற்ற இது அத்தியாவசியமானது என்றும் வாதிட்டார். மேலும், த.வெ.க-வின் 35 எம்.எல்.ஏ-க்களிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்ற தகவலைச் சுட்டிக்காட்டி, எளிய உறுப்பினர்களின் தொகுதிப் பணியை உறுதி செய்யவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழியிடம் மட்டும் 14 கார்கள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து அ.தி.மு.கவை சேர்ந்த தனபால் ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்த த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் 107 பேரில், 35 பேரிடம் மட்டுமே சொந்தப் பெயரில் கார் இல்லை. ஏற்கனவே சொந்தக் கார் வைத்துள்ளவர்கள் 72 பேர். அதிலும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 40 பேர் தலா 2 கார்களைச் சொந்தமாக வைத்துள்ளனர். 5-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சொந்தமாக வைத்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகும்.
குறிப்பாக, கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. கனிமொழி தனது பிரமாணப் பத்திரத் தகவல்களின்படி, அவரிடம் மட்டும் 14 கார்கள்/வாகனங்கள் உள்ளன. அவரது கணவரிடம் உள்ள கார்கள்/வாகனங்கள் 12 ஆகும். இது சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
கனிமொழி பெயரில் உள்ள வாகனங்கள்: மஹிந்திரா மராசோ, ஜீப் தார் LX, ஈச்சர் வர்த்தக வாகனம், எர்டிகா VXI, ஜீப் தார் AX, XUV 700, அர்பன் குரூஸர் ஹைரைடர் (Hybrid), ஃபார்ச்சூனர், டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனம், பிக்கப் 407, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் வர்த்தக வாகனம் மற்றும் பிற வணிக/சரக்கு வாகனங்கள்.
கனிமொழியின் கணவர் பெயரில் உள்ள வாகனங்கள்: கைனெடிக் இ-லூனா X3, எர்டிகா VXI CNG, ஜீப் தார் AX, XUV 700, அர்பன் குரூஸர் ஹைரைடர் (Hybrid), ஃபார்ச்சூனர், டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனம், பிக்கப் 407, மஹிந்திரா லிமிடெட் வர்த்தக வாகனம், மஹிந்திரா ஜீட்டோ X.
சட்டமன்றத்தில் எளிய எம்.எல்.ஏ-க்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு கார் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், த.வெ.க. உறுப்பினர்கள் குடும்பமாக 26 வாகனங்கள் வரை வைத்திருக்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பல கோணங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தவெக அரசின் நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.

