தண்ணீர் விநியோகம் செய்யப்படாதது குறித்து புகார் அளிக்க வந்த பொதுமக்களை, துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் கண்மூடித்தனமாக தாக்கியதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அதிமுக தனது எக்ஸ் தளத்தில் ஒரு கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், 'பத்து நாட்களாக தண்ணீர் வரவில்லை என்ற தனது பகுதியில் உள்ள குறைகளைச் சொல்ல வந்த கார்த்தி என்பவரை, துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர்' என்று வசனம் பேசியதாகக் கூறப்படும் 'ரீல் முதல் அமைச்சர் விஜய்' அவர்களே, உங்கள் கட்சியின் துறையூர் 'எல்லைக் காப்பாளர்' மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா? உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் தங்களது குறைகளைச் சொல்ல வந்தால் அடிப்பீர்களா? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பயன்படுத்திய வார்த்தைகள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா என்றும் அதிமுக தனது பதிவில் சாடியுள்ளது. 'இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?' என்றும் அதிமுக காட்டமாக வினவியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

