தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய தொடக்கக் கல்வி இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போலி சான்றிதழ்கள் மூலம் சிலர் பணியில் சேர்ந்துள்ளதாக எழுந்த புகார்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக நேரடி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள், அவர்கள் பணிக்குச் சேர்ந்த பின்பு தகுதிகாண் பருவம் முடிக்கும் நாளிலேயே உரிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், அரசுத் தேர்வுகள் இயக்கக அலுவலருக்கு அனுப்பி உண்மைத்தன்மை அறியப்பட வேண்டும். இந்த செயல்முறை தாமதமின்றி முடிக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே பணிபுரிந்து வரும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் பெற்றுள்ள கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியப்பட்ட விவரத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஒருமுறை உண்மைத்தன்மை அறியப்பட்ட சான்றுகளை மீண்டும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கோ, பல்கலைக்கழகத்துக்கோ அனுப்பத் தேவையில்லை.
ஆனால், சில ஆசிரியர்கள் 10 ஆண்டுகள் கழித்து தேர்வுநிலை அல்லது 20 ஆண்டுகள் கழித்து சிறப்பு நிலை அனுமதிக்கும்போதும், ஓய்வு பெறும் காலம் வரையிலும் கல்விச் சான்று உண்மைத்தன்மை அறியப்படாததால் அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால், ஓய்வு பெறும் நாளில் சான்று உண்மைத்தன்மை அற்றது எனத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஓய்வு பெற அனுமதி மறுப்பதும், ஓய்வூதியப் பணப்பலன்களை நிறுத்தி வைப்பதும் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு, அவர்கள் நீதிமன்றம் சென்று துறைக்கு எதிரான தீர்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், நியமன அலுவலர்கள், ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மற்றும் பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலர்கள் இனிவரும் காலங்களில் புகார்களுக்கு இடமளிக்காத வகையில், உடனடியாக உரிய கால நேரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றினை உண்மைத்தன்மை அறியும் வகையில் உரிய அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத்தன்மை அற்றது அல்லது போலியானது என அறிக்கை பெறப்பட்டால், அந்தந்த ஆசிரியர்கள் மீது உடனடியாக காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் சுற்றறிக்கையில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், கல்வித் துறையில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, போலிச் சான்றிதழ் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் இந்த சுற்றறிக்கையின்படி உடனடியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், தகுதியான ஆசிரியர்கள் மட்டுமே பணியில் நீடிப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும். கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு என்பது ஆசிரியர்களின் பணித்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய படியாகும்.

