புதிய தலைமைச் செயலகம்: தவெக அரசு முடிவை கைவிட வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

சென்னை பட்டினம்பாக்கத்தில் அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதை டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டார். இருப்பினும், பொதுமக்களுக்கும், குறிப்பாக அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படாத நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி, ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இங்கு குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்காலத்தில் சாலை, உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகளே உள்ளன. இத்தகைய சூழலில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்றும், அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், அப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்லும் இந்த சூழலில், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது.

புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் என்றும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாக அமையும் என்றும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும். ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்பது முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது என டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version