டாடா குழுமத்தில் தற்போது நிலவி வரும் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பு, உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. இதற்காக, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியை டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் ஆஜராக நியமித்துள்ளனர்.
இந்த அதிகாரப் போட்டியில், டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் சார்பில் வாதாட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி களமிறங்கியுள்ளார். இது குறித்து சிங்வி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ரத்தன் டாடாவுடனான தனது பழைய தொடர்பு, மற்றும் இரு தரப்பிலும் உள்ள முக்கிய நபர்களுடன் தனக்கிருக்கும் தனிப்பட்ட நட்பு காரணமாக, இந்த சிக்கல்களை சுமூகமாக தீர்க்க முடியாமல் போனது தனக்கு மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
'முன்பு ரத்தன் டாடாவுடன் நெருக்கமாக பணியாற்றியவன், அவரது மரபை அறிந்தவன் மற்றும் தற்போதைய டாடா மோதலில் இருதரப்பிலும் உள்ள அனைத்து முக்கிய நபர்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவன் என்பது மட்டுமின்றி, அவர்கள் அனைவர் மீதும் உண்மையான மற்றும் நிலையான மரியாதையையும் சிறந்த நட்புறவையும் கொண்டவன் என்ற முறையில், ஒரு தரப்பின் முன்னணி வழக்கறிஞராக நான் களமிறங்கும் போது, இந்த சிக்கல்களை சுமூகமாக தீர்க்க முடியாமல் போனது எனக்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது' என்று சிங்வி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், 'பங்குதாரர்களின் உரிமைகளை முடக்குவது நூற்றுக்கணக்கான இந்திய நிறுவனங்களின் கார்ப்பரேட் நிர்வாகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகக் கட்டியெழுப்பப்பட்ட டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் டாடா சன்ஸ் இடையேயான உறவைப் பிரிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 'நூறு ஆண்டுகளுக்கும் மேலான டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் இடையேயான பிணைக்கப்பட்ட உறவை முறித்து, ஒன்றை இன்னொன்றிலிருந்து பிரிப்பது நினைத்துப் பார்க்க முடியாதது' என்று அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
டாடா டிரஸ்ட்ஸின் வாக்களிப்பில் ஒருமனதான முடிவு மற்றும் அதன் வீட்டோ (Veto) அதிகாரங்களின் முக்கியத்துவம் குறித்தும் சிங்வி பேசியுள்ளார். 'வாக்களிப்பில் டிரஸ்ட்டின் ஒருமனதான முடிவு என்ற மாறாத நிபந்தனையையும், பல தசாப்தங்களாக எவ்வித எதிர்ப்பும் இன்றி பயன்படுத்தப்பட்ட தெளிவான வீட்டோ விதிகளையும் புறக்கணிப்பது முற்றிலும் நியாயமற்றதாகத் தோன்றுகிறது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாடா – மிஸ்திரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி-யான சிங்வி சுட்டிக்காட்டினார். டாடா சன்ஸ் உடனான உறவில் டாடா டிரஸ்ட்ஸிற்கே அந்த தீர்ப்பு முன்னுரிமை அளித்ததாகவும், டாடா சன்ஸ் விதிகளில் உள்ள சிறப்பு பிரிவுகளை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.
செப்டம்பர் 17 அன்று, டாடா சன்ஸ் நிர்வாகக் குழு, தலைவர் சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்ய வாக்களித்தது. ஆனால், டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா இந்த தீர்மானத்தை எதிர்த்தார். டாடா சன்ஸில் சுமார் 66% பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸ், இந்த முடிவை சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனப் பதிவை கைவிடுவதற்கான கோரிக்கையை ஆர்.பி.ஐ நிராகரித்ததைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த சிக்கல்களுக்கு இப்போது சட்டப்பூர்வமான தீர்வு தேவைப்படும் என்று சிங்வி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 'துரதிர்ஷ்டவசமாக, இணக்கமும் சுமுகமான சூழலும் இல்லாத நிலையில், இந்த சிக்கல்களுக்கு சட்டப்பூர்வத் தீர்வே முடிவாக இருக்க முடியும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

