தமிழகத்தில் மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகள் குறித்த மர்மங்கள் நீடிப்பதாகவும், இது தொடர்பாக அரசு ஏன் வெள்ளையறிக்கை வெளியிடத் தயங்குகிறது என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்' என திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள் மற்றும் அது குறித்த தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை.
'மூடப்பட்டதாக' கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்குக்கூட RTI-யிடம் பதில் இல்லை. திரு. விஜய் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் தற்போதைய அரசு மென்று முழுங்குகிறது.
மொத்தத்தில், மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும், 'அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும்' என்ற ஒரே பதில் மட்டுமே RTI-யிடம் இருந்து கிடைக்கிறது. அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றைச் சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?
தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்குத் தயங்குகிறது? உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்.
வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மூடப்பட்ட கடைகள் குறித்த முழு விவரங்களையும், அவை மூடப்பட்டதற்கான காரணங்களையும், ஊழியர்களின் நிலை குறித்தும் அரசு வெளிப்படையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

