பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படுவதாகவும், அதனை சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை என்றும், இது உடல் மற்றும் மன நலத்தை பாதிக்கும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டினார். எனவே, தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்க வேண்டும் என்றும், பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இது தொடர்பாக விதிகளை உருவாக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விதிகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி, சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதால், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்ளது. இது பெண்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணுவதற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் அரசுப் பணிகளில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறைகள் தமிழ்நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

