தமிழக பாஜக படுதோல்வி: மத்திய தலைமைக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு!

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சந்தித்த படுதோல்வி குறித்து மத்திய தலைமை தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் என பலரும் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்ட போதிலும், பாஜகவின் தாமரை சின்னம் மலரவில்லை.

மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் கூட வெற்றி பெறாதது பாஜகவின் தேசிய தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக பாஜகவின் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்காக விரைவில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை மத்திய தலைமைக்கு அனுப்பப்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது. கணிசமான வாக்குகளைப் பெற்று, வாக்கு சதவீதத்தையும் அதிகரித்திருந்தது. ஆனால், இந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெருவாரியான வாக்குகளை இழந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் பணி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவலும் பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் கூறுகையில், 'எந்தவொரு கட்சியிலும் இது சகஜம்தான். தோல்வி ஏற்பட்டால், அதுகுறித்து ஆராய்வது அவசியம். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது' என்று தெரிவித்துள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version