தமிழ்நாட்டில் 2031க்குள் 20,000 EV சார்ஜிங் நிலையங்கள்: அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2031க்குள் 20,000 EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு, 'வெற்றி தமிழகம்' தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, 2031ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பொது மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் இலக்கை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய, மின்சார வாகன பயன்பாட்டை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், ஆரம்ப முதலீட்டு தடைகளை குறைத்தல் மற்றும் உலகத் தரத்திலான EV சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற பல்வேறு கொள்கை சார்ந்த முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், போக்குவரத்துத் துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும்.

இந்த இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் வழிகாட்டுதலின்படி, 13.7.2026 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலத்தில் பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், 14.7.2026 அன்று தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில், ITDP India மற்றும் Guidance Tamil Nadu அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஒரு உயர்மட்ட தொழில்நுட்பக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்றாக, தற்போதுள்ள உயரழுத்த/அதிஉயரழுத்த (HT/EHT) மின் இணைப்புகளில் துணை மின்மீட்டர் (EV Sub-meter) வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், EV சார்ஜிங் வசதிகளை அமைக்கும் நிறுவனங்கள் தனி மின் இணைப்பு பெற வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், இவற்றுக்கு நிலைக்கட்டணம் / குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் (Fixed/ Demand Charges) விதிக்கப்படாது என்றும், மின்சார வாகனங்களுக்கான மின் கட்டணத்தின் கீழ் மின்பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணம் (Energy Charges) மட்டும் வசூலிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையானது, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள், கூடுதல் மின் உள்கட்டமைப்பு தேவையின்றி, குறைந்த முதலீட்டில் விரைவாக மின்வாகன (EV) சார்ஜிங் வசதிகளை அமைக்க வழிவகுக்கும். இது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை பெருமளவில் விரிவுபடுத்த உதவும்.

மேலும், தற்போதுள்ள நுகர்வோரின் மின்சுமை மற்றும் கட்டணப் பிரிவை பாதிக்காமல், தேவைப்படும் இடங்களில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக தனியாக ஒரு புதிய மின் சேவை இணைப்பை பெறும் வசதியும் வழங்கப்படும். இது சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான செயல்முறையை எளிதாக்கும்.

மாநிலத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு முதலீடுகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023-ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பு உருவாக்குபவர்கள் அதிகளவில் முதலீடு செய்ய ஏதுவாக, மின் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான தனித்துவமான மின் கட்டணப் பிரிவில் நடைமுறையில் உள்ள நிலைக்கட்டணம்/குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தை முழுமையாக விலக்கவோ அல்லது கணிசமாகக் குறைக்கவோ அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

இந்த முக்கிய நடவடிக்கைகள் மூலம், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட தடைகள் பெருமளவில் குறைக்கப்பட்டு, தனியார் முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு அதிகரிக்கும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் பொது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு விரைவாக விரிவுபெற்று, 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை விரைவாக அடைய வழிவகுக்கும். மேலும், பசுமை போக்குவரத்து மற்றும் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் தமிழ்நாடு நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதற்கும் இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version