15 வயது வீரரை சீண்டினால் இப்படித்தான்: ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக 94 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரை 'தேசிய பொக்கிஷம்' என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மனதாரப் பாராட்டியுள்ளார். மேலும், இந்த இளம் வீரரிடம் வாயை விட்டு வம்பிழுத்தால் பதிலடி நிச்சயம் கிடைக்கும் என இலங்கை ஏ அணிக்கு நடந்ததை சுட்டிக்காட்டி எதிரணி வீரர்களை ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளார்.

முத்தரப்பு தொடரின் லீக் சுற்றில், இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி சூப்பர் ஓவர் முறையில் தோல்வியடைந்தது. அப்போது இலங்கை வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷிக்கு முன்னால் ஆக்ரோஷமாகக் கொண்டாடியதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை மனதில் வைத்தே, இறுதிப் போட்டியில் இலங்கை பந்துவீச்சை வைபவ் சூர்யவன்ஷி சிதறடித்தார். வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து, இந்தியா ஏ அணிக்கு எளிதான வெற்றியைத் தேடித்தந்தார்.

இது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், 'ஐபிஎல் தொடரிலிருந்தே வைபவ் சூர்யவன்ஷியிடம் வம்பு வைத்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்த்து வருகிறோம். அவரது விக்கெட்டை வீழ்த்திய பின் எதிரணிகள் ஆக்ரோஷமாகக் கொண்டாடி, அதற்குப் பதிலடியாக அவர் அந்த அணிகளை துவம்சம் செய்வது இது 4வது முறையாகும். இதனால் தான் சொல்கிறேன், இளைஞர்களிடம், குறிப்பாக இந்த 15 வயது சிறுவனிடம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள். அவனது அதிரடி ஆட்டத்திலேயே போட்டி முடிந்துவிட்டது. ஒருவேளை அவன் ரன் குவிக்காமல் இருந்திருந்தால், இந்தியா தோற்றிருக்கும்' என்றார்.

மேலும் இலங்கை வீரர்களை எச்சரித்த ஸ்ரீகாந்த், 'அவனை வம்புக்கு இழுத்தால் என்ன நடக்கும் என்பதை இலங்கை வீரர்கள் இப்போது பார்த்திருப்பார்கள். அவர்கள் தங்களது வேலையை மட்டும் அமைதியாகப் பார்த்திருந்தால் ஒருவேளை கோப்பையை வென்றிருக்கலாம். இது ஒன்றும் ஐபிஎல் தொடர் அல்ல என்று அவனிடம் சொல்ல வருகிறீர்களா? அதற்கு அவனது பதில் உங்களிடம் பந்துவீச்சு கூட்டணியே இல்லை என்பதாக உள்ளது' என்று கூறினார். வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலம் குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், பெரிய போட்டிகளை எதிர்கொள்ளும் அசாத்திய மனப்பக்குவம் அவனிடம் உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இவனை முறையாக வழிநடத்த வேண்டியது மிகவும் அவசியம். அவன் ஒரு தேசிய பொக்கிஷம், இந்திய அணிக்கு பல அற்புதங்களைச் செய்வான். அவன் உண்மையிலேயே ஒரு அதிசயக் குழந்தை, உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறான்' என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version