திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை திருப்பி தர வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு சவால்

திமுகவினருக்கு மனசாட்சி இருந்தால், தாங்கள் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று 'ஜோஹோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சவால் விடுத்துள்ளார். பள்ளி விவகாரம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து, தமிழக அரசுக்கு உதவுவதற்காக தான் கூறிய பொய் என திமுகவினர் தாக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கலைவாணி கல்வி மையம்' என்ற அமைப்பின் கீழ் தென்காசி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் தலா ஒரு இலவச NIOS பள்ளி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேனியில் உள்ள பள்ளியை முதலில் ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி நடத்தி வந்ததாகவும், ஆனால் தடையின்மைச் சான்றிதழ் வழங்க மாநில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் அவரால் பள்ளியைத் தொடர முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்காசியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக DTCP அனுமதி கோரி விண்ணப்பித்தபோது, திமுக ஆட்சியில் இருந்தவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும், ஆட்சி மாறியதும் அனுமதி கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த DTCP ஒப்புதல் தொடர்பாகத்தான் தான் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும், எந்த ஒப்புதலுக்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அரசு கூறியதை பொதுவெளியில் பாராட்ட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது குணநலன்களுக்கு திமுகவினரின் சான்றிதழ் தேவையில்லை என்றும், தொழில்நுட்பத்தில் மூழ்கியிருக்கும் தன்னைப்போன்றவர்கள் ஏன் இவற்றைப் பதிவிட வேண்டும் என்று திமுகவினர் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் ஏதுமில்லாமல் வளர்ந்தவன் என்றும், கிராமப்புறங்களுக்கு புத்துயிர் அளித்து, பாரதத்தை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைய செய்வதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திமுகவினரின் தாக்குதல்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்றும், அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version