தென்காசி மற்றும் செங்கோட்டை ரயில் பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக, தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிப்பதற்காக 'விஸ்டாடோம்' எனப்படும் கண்ணாடி ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக, மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் (16327 / 16328) இரண்டு விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் சேவையானது மதுரையிலிருந்து அக்டோபர் 22, 2026 முதல் ஜனவரி 15, 2027 வரையிலும், குருவாயூரிலிருந்து அக்டோபர் 23, 2026 முதல் ஜனவரி 16, 2027 வரையிலும் இயக்கப்படும். கேரளாவில் ஓடும் ஒரு ரயிலில் இந்த சிறப்பு வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த கண்ணாடிக் கூண்டு ரயிலின் முக்கிய சிறப்பம்சமாக, மேற்கூரை முழுவதும் கண்ணாடியால் ஆன பேனல்களும், பக்கவாட்டில் அகலமான கண்ணாடி ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் இயற்கையின் எழில் கொஞ்சும் காட்சிகளை முழுமையாக ரசிக்க முடியும். மேலும், இயற்கை அழகை தெளிவாக கண்டு மகிழ்வதற்கு ஏதுவாக, இருக்கைகள் 180 டிகிரி வரை சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வசதி மூலம், மலைகள், சுரங்கங்கள், அருவிகள், ஆறுகள் மற்றும் அடர்ந்த காடுகள் என கொல்லம் – செங்கோட்டை இடையேயான பாதையின் அனைத்து இயற்கை அழகையும் பயணிகள் நேரடியாக கண்டு களிக்கலாம்.
ஒவ்வொரு விஸ்டாடோம் பெட்டியிலும் மொத்தம் 44 இருக்கைகள் மட்டுமே இடம்பெறும். பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட வசதி (AC), வைஃபை (Wi-Fi) மற்றும் ஜி.பி.எஸ் (GPS) அடிப்படையிலான தகவல் திரைகள், தானியங்கி கதவுகள் போன்ற நவீன வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கண்ணாடிக் கூண்டு ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழிலை கண்முன்னே நிறுத்தும் இந்த புதிய ரயில் சேவை, பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

