இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பு: நிபந்தனையால் பறிபோன சேவாக்கின் கனவு!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தன்னை அணுகியதாக முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். அப்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடு உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்த வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய சேவாக், 'விராட் கோலியோ அல்லது அப்போதைய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரியோ என்னை நேரடியாக அணுகியிருந்தால் மட்டுமே நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பேன். 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது, கும்ப்ளே மற்றும் கோலிக்கு இடையே சுமூகமான உறவு இல்லை என்பதை உணர்ந்த அமிதாப் சவுத்ரி என்னை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் கும்ப்ளேயின் ஒப்பந்தம் முடிவடைவதால், அங்கிருந்தே புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்று, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய அணியுடன் பயணிக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், இந்த வாய்ப்பை சேவாக் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் அவர் விதித்த ஒரு முக்கிய நிபந்தனையாகும். இந்திய அணியின் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றால், எனது உதவியாளர்களான உதவி பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், பிசியோ மற்றும் உடற்பயிற்சியாளர் என அனைவரையும் நானே தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார்.

ஆனால், இந்த நிபந்தனைக்கு பிசிசிஐ நிர்வாகம் சம்மதிக்கவில்லை. இதனால், சேவாக் அந்த பயிற்சியாளர் பதவியை ஏற்கவில்லை. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'எனது நிபந்தனையை பிசிசிஐ ஏற்காததால், நான் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அனில் கும்ப்ளே விலகிய பிறகு, சஞ்சய் பங்கர் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டார். அதன் பின்னர், ஜூலை 2017 இல் ரவி சாஸ்திரி முழுநேர தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி 2021 வரை தொடர்ந்தது.

அப்போது, ரவி சாஸ்திரிதான் விராட் கோலியின் முதன்மை பயிற்சியாளர் விருப்பமாக இருந்ததாகப் பேசப்பட்டது. ஆனால், தற்போது வீரேந்தர் சேவாக்கை பயிற்சியாளராக நியமிக்கவே விராட் கோலி விரும்பியதாகத் தெரிய வந்துள்ளது.

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் ஒரு வலிமையான அணியாகத் திகழ்ந்தது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் பல வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தாலும், போட்டியில் ஆட முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு சில வீரர்கள் தள்ளப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், சேவாக்கின் இந்த பேட்டி புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version