விஜய் ‘தாய் மாமன்’ கருத்து: சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை 'குழு மோதல்' என அரசு மூடி மறைப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் 'தாய் மாமன்' என்ற முறையில் என்ன சொல்லப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நட்பையும் நல்லொழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய கல்விக்கூடங்களிலேயே மாணவர்களிடையே பகைமையும், வெறுப்பும், போதைப்பழக்கமும் அதிகரித்து, அது ஒரு உயிரைப் பறிக்கும் நிலைக்கு வந்துள்ளது எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. தம்பி அமுதனை இழந்து வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாலேயே மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கோவை செட்டிப்பாளையம் காவல்நிலையத்திற்கு மாணவர் அமுதன் அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடமிருந்து போதைப்புழக்கம் குறித்த தகவல்கள் பெறப்பட்ட பின்னரே, ஏறக்குறைய 20 மாணவர்களால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்திகள் பெற்றோரின் குற்றச்சாட்டை உறுதி செய்கின்றன.

போதைப் பொருட்களின் புழக்கம் எனும் முதன்மைக் காரணத்தை மூடி மறைத்து, மாணவர்களிடையேயான தகராறு என வழக்கின் கோணத்தையே மாற்ற முற்படும் தவெக அரசின் போக்கு அநீதிக்குத் துணைபோகும் துரோகம் இல்லையா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் 'குழு மோதல்' எனக் கூறியது மோசடித்தனம் இல்லையா? 20 பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வதற்குப் பெயர் குழு மோதலா? அலைபேசி பறித்ததால் வந்த சண்டை, குழுமோதல் என்றால் மட்டும் இப்படுகொலை நியாயமாகிவிடுமா? இல்லை இது படுகொலையே இல்லை என்றாகிவிடுமா?

அரசு தன் மீது குற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இன்னொரு கொடுங்குற்றத்தை மூடி மறைக்கலாமா? பறிபோன மாணவனின் உயிரைவிட உங்கள் ஆட்சியின் மீதான நற்பெயர்தான் முதன்மையானதா? பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனையே இல்லை என்கிறதா அரசு? அண்மையில் ஒரு பள்ளியில் கஞ்சா போதையில் சக மாணவனைத் தாக்கும் காணொளியை ஆட்சியாளர்கள் பார்க்கவில்லையா?

பரப்புரைக்கூட்டங்களில் தன்னை 'தாய் மாமன்' எனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், படுகொலை செய்யப்பட்டு இறந்த 19 வயது பிள்ளையின் மரணத்திற்கு தாய் மாமனாக என்ன சொல்லப் போகிறார்? என்ன நீதியைப் பெற்றுத் தரப் போகிறார்? தனது மகனை இழந்தப் பரிதவிப்பில் பெருங்குரலெடுத்து ஓலமிடும் பெற்றோருக்கு என்ன சொல்ல விளைகிறார்?

நடந்தவற்றை மூடி மறைத்து, பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் வேலையை கல்லூரி நிர்வாகம் செய்கிறது. போதைப்பொருட்களின் பயன்பாட்டிற்கும், இக்கொலை வழக்குக்கும் தொடர்பில்லை என உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு. இது வெளிப்படையாகச் செய்யப்படும் ஜனநாயகத்துரோகம் இல்லையா? வெட்கக்கேடு! பேரவலம்!

ஆகவே, தம்பி அமுதனின் படுகொலையில் நீதி விசாரணை செய்யப்பட்டு, தொடர்புடைய கொலையாளிகள் யாவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்," என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version