பள்ளிகள் தயார் நிலை: கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

புதிய கல்வியாண்டு 2026-27ஐ தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த அறிவுறுத்தல்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிவறைகள், தலைமை ஆசிரியர் அறை, குடிநீர் தொட்டிகள் மற்றும் கை கழுவும் இடங்கள் என அனைத்து பகுதிகளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாகவும், தயார் நிலையிலும் இருக்க வேண்டும். மேலும், பள்ளியின் பெயர் பலகை தொலைவில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும் வண்ணம் வர்ணப்பூச்சுகளால் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறைகள், ஹைடெக் ஆய்வகங்கள், கணினிகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் போன்ற உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

2026-27 கல்வியாண்டுக்கான விலையில்லா நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய விரிவான திட்டமிடல் அவசியம். இதற்காக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசு பள்ளிகளில் கிடைக்கும் தரமான கல்வி, வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், விலையில்லா நலத்திட்டங்கள் போன்றவற்றை பள்ளி வளாகம் அருகிலேயே விளம்பரப்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடைகள், விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்து விநியோகமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அச்சிடப்பட்ட இலவச நோட்டுப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு 92.18 சதவீதமும், பாடப்புத்தகங்கள் 100 சதவீதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலவச சீருடைகளில் 95 சதவீத தையல் பணிகள் முடிந்து, 71 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை உடனடியாக முடிக்குமாறும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version