வர்ணனையாளர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் – முரளி கார்த்திக் மோதல்: வைரலாகும் வீடியோ

வர்ணனை பெட்டியில் விவாதிக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் முரளி கார்த்திக்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது, வர்ணனை பெட்டியில் இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் நேரலையிலேயே ஒருவரையொருவர் கடுமையாக கிண்டலடித்துக் கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஆட்டத்தின் இடைவேளையின் போது, கமெண்டரி பெட்டியில் அமர்ந்திருந்த முரளி கார்த்திக், சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் முகபாவனையை கிண்டலடிக்கும் விதமாக பேசத் தொடங்கினார். 'உங்களுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த 'பவுட்' முகம் இருக்கிறது. ஆனால், உங்கள் முகபாவனையால் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எங்களுக்குப் புரிவதில்லை. தயவுசெய்து அதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்' என்று நேரலையிலேயே அவர் கூறினார்.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 'கேமரா கோணத்தை மாற்றி முகலட்சணம் உடைய வேறு யாரிடமாவது காட்டுங்கள். முரளி கார்த்திக் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தன்னைத்தானே 'சூப்பர், சூப்பர்' என்று பாராட்டிக் கொள்வார் என்று நினைக்கிறேன்' என்றார்.

அதற்கு முரளி கார்த்திக், 'நான் கண்ணாடி பார்ப்பதே இல்லை. அது நீங்கள் தான். உங்களுடன் விளையாடியவர்களுக்கும், உங்களுடன் பணிபுரிந்தவர்களுக்கும் உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும்' என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் ஆவேசமடைந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 'நான் கண்ணாடி பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு கண்ணாடி முன்னால் நிற்பதற்கு எந்த உந்துதலும் இருக்காது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாம் இருவரும் எல்லை மீறிப் பேசுகிறோம், சமூக வலைதளங்களில் இது பெரிய அளவில் விவாதிக்கப்படும்' என்று சிரித்துக் கொண்டே அந்த விவாதத்தை முடித்துக் கொண்டார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில், இந்திய அணி இலங்கைக்கு 372 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த பரபரப்பான போட்டிக்கு மத்தியில், வர்ணனை பெட்டியில் நடந்த இந்த சர்ச்சை வீடியோ பரவி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version