சாண்ட் பேப்பர் சர்ச்சை: கவாஜா கருத்துக்கு முன்னாள் பயிற்சியாளர் லீமன் விளக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமன்

2018-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் அரங்கேறிய சாண்ட்பேப்பர்-கேட் சர்ச்சை தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமன், வீரர் உஸ்மான் கவாஜா கூறிய கருத்துகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். பந்தை சேதப்படுத்தும் திட்டம் ஆஸ்திரேலிய அணி முழுவதற்கும் தெரிந்திருந்தது என்ற கவாஜாவின் கருத்தை லீமன் மறுத்துள்ளார்.

உஸ்மான் கவாஜா எழுதியுள்ள 'சப்ர்' என்ற சுயசரிதை நூலில் சில பகுதிகள் சமீபத்தில் வெளியாகின. அதில், 2018 கேப் டவுன் டெஸ்ட் போட்டியின் போது கேமரூன் பாங்க்ராப்ட் பந்தை சேதப்படுத்திய திட்டம், அணி நிர்வாகிகள், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என அனைவருக்கும் தெரிந்திருந்தது என்று கவாஜா குறிப்பிட்டிருந்தார். மேலும், இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியிலும் பந்தை சேதப்படுத்தும் முயற்சி நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அணி முழுவதும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்று தான் யோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் பாங்க்ராப்ட் ஆகிய மூவருக்கு மட்டுமே தடைகள் விதிக்கப்பட்டன. பந்துவீச்சாளர்கள் மீது கேள்விகள் எழுந்தபோது, தங்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

ABC ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கவாஜாவின் கருத்து குறித்துப் பேசிய லீமன், சாண்ட்பேப்பர் பயன்படுத்தியது அணி முழுவதற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். பந்தை சேதப்படுத்தும் சம்பவங்கள் கிரிக்கெட்டில் நீண்டகாலமாக நடந்து வந்தாலும், சாண்ட்பேப்பர் பயன்படுத்தும் அளவுக்குத் திட்டம் தீட்டப்பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

'என்னைப் பொறுத்தவரை, சாண்ட்பேப்பர் பயன்படுத்தியது அனைவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. கிரிக்கெட்டில் பந்தைச் சேதப்படுத்துவது ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் தற்போது அது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. அதற்காக அது சரியானது என்று நான் சொல்ல வரவில்லை. அந்தச் சம்பவத்திற்காக நாங்கள் கடுமையான விலையைக் கொடுத்துவிட்டோம்' என்று லீமன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் அனைவரும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கவாஜா கூறியது பற்றி தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்றும், அப்போது பல்வேறு கூட்டங்கள் நடந்து கொண்டிருந்ததால் அதுபற்றி தனக்குத் தெரியவில்லை என்றும் லீமன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து லீமன் விலகினார். விசாரணையில் அவருக்கு இந்தச் சம்பவத்தில் நேரடித் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தபோதிலும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அந்தச் சம்பவம் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்துப் பேசிய லீமன், 'அந்த சம்பவத்திற்குப் பிறகு சுமார் நான்கு மாதங்கள் நான் வீட்டை விட்டு வெளியே வராமல் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் இந்த விவகாரத்தைப் பேசுவது சம்பந்தப்பட்ட குடும்பங்களையும் நபர்களையும் மீண்டும் ஒரு மோசமான சூழ்நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். நான் இந்த விவகாரத்தைக் கடந்து வாழ்க்கையில் முன்னகர்ந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version