ரிங்கு சிங் – பிரியா சரோஜ் திருமணம் டிசம்பர் 4ல் லக்னோவில்!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் எம்.பி. பிரியா சரோஜ் திருமணம் டிசம்பர் 4 அன்று லக்னோவில் நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த திருமண அறிவிப்பு இரு குடும்பத்தினராலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் லக்னோவில் உள்ள ரமாடா ஹோட்டலில் நடைபெறும் என இருவீட்டாரும் உறுதி செய்துள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

உத்தரபிரதேசத்தின் மச்லிஷகர் தொகுதி எம்.பி-யாக இருக்கும் பிரியா சரோஜுக்கும், இந்திய அணியின் அதிரடி ஃபினிஷரான ரிங்கு சிங்கிற்கும் கடந்த 2025 ஜூன் 8 அன்று லக்னோவில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது காதல் கதை எப்படி தொடங்கியது என்பது குறித்து ரிங்கு சிங் முன்னர் பகிர்ந்து கொண்டார். கொரோனா காலகட்டத்தில் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது, சமூக வலைதளப் பக்கத்தில் கிராமத்து தேர்தல் தொடர்பான பிரியா சரோஜின் புகைப்படத்தை தான் பார்த்ததாக அவர் கூறினார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன், பிரியா தனக்கு ஏற்ற துணை என்று தோன்றியதாக ரிங்கு சிங் தெரிவித்தார்.

முதலில் பிரியாவுக்கு குறுஞ்செய்தி அனுப்ப தயக்கம் இருந்ததாகவும், பின்னர் தனது சில புகைப்படங்களை பிரியா லைக் செய்ததைப் பார்த்ததும் தைரியம் வந்து உடனடியாக மெசேஜ் அனுப்பியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதன் பிறகு இருவரும் தொடர்ந்து பேசத் தொடங்கினர். கடந்த 2022-ஆம் ஆண்டு இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாக ரிங்கு சிங் மனம் திறந்து பேசியிருந்தார்.

ஐபிஎல் போட்டிகளின் போது, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு பிரியா சரோஜ் நேரில் வந்து ரிங்கு சிங்கிற்கு தொடர்ந்து உற்சாகம் அளித்து வந்தார். இந்த திருமண நிகழ்வில் பல அரசியல் தலைவர்களும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருமண செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீப காலமாக ரிங்கு சிங்கிற்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்பதும், தற்போது நடைபெற்று வரும் இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலும் அவர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version