இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: ரயில் அபராதம் முதல் பாஸ்போர்ட் கட்டணம் வரை உயர்வு!

இன்று முதல் பல முக்கிய அறிவிப்புகள் அமலுக்கு வந்துள்ளன. ரயில்வே அபராதம், பாஸ்போர்ட் கட்டணம், ஆதார் புதுப்பித்தல், கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் வங்கி தயாரிப்புகள் விற்பனை என பலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படவுள்ளன.

ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.250-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி நுழையும் ஆண் பயணிகளுக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும். தட்கல் டிக்கெட் முன்பதிவு, ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் மூலம் மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். மேலும், தட்கல் புக்கிங் தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்கு வணிகரீதியான ஏஜென்ட்டுகள் டிக்கெட் புக் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆகவும், அவசர தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆதார் அட்டைதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இன்று முதல் டிசம்பர் 31, 2026 வரை, அதிகாரப்பூர்வ mAadhaar செயலி மூலம் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 கட்டணம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போன்பே எஸ்பிஐ கார்டுகளுக்கான ரிவார்டு பாயிண்ட் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் வசதியை இலவசமாகப் பெற, முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.60,000 செலவு செய்திருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் காப்பீடு அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை தவறான தகவல்களைக் கூறி விற்பனை செய்வதைத் தடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டமைப்பைக் கொண்டு வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் முழு தொகையையும் திரும்பப் பெறவும், இழப்பீடு கோரவும் உரிமை உண்டு. மாதத்தின் முதல் நாளான இன்று, எல்பிஜி சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றங்களை அறிவிக்கலாம். கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31, 2026 என்பதால், வரி செலுத்துவோர் இந்த மாதத்திற்குள் தங்களது ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய திட்டமிட வேண்டும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version