சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதவ் அர்ஜுனா தவறான தகவல்களை பரப்புகிறார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திமுக அரசு சரியாக கையாளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதை தகுந்த வழக்கறிஞரிடம் கேட்டு அவர் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைச்சர் பொய்யான தகவல்களை சொல்லக்கூடாது. மேகதாது அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய கர்நாடக அரசு கேட்டபோது, திட்ட அறிக்கையை தயாரிக்கலாம் ஆனால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், அந்த உத்தரவு தவறு என்று உச்ச நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கல் செய்துள்ளோம். மேகதாது அணையே வேண்டாம் என நாங்கள் கூறும் போது, திட்ட அறிக்கை குறித்து தமிழக அரசிடம் கேளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறுவது தவறு என்று வாதிட்டு வருகிறோம். மேகதாது அணைக்கான அடிப்படையே ஆரம்பிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆதவ் அர்ஜுனாவுக்கு இதெல்லாம் புரியாது. அவர் லாட்டரியில் கவனம் செலுத்துபவர். அரசியல் அவருக்கு புதிது. மேகதாது அணையை கட்டுவதற்கு திமுக ஒரு துளி கூட அனுமதித்தது கிடையாது. ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக திமுக மீது ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டுகிறார். நீங்கள் (முதலமைச்சர் விஜய்) கர்நாடக முதலமைச்சருடன் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. மேகதாது விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசைதான் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்தித்த போது, மேகதாது விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி கடிதம் கொடுத்ததாகவோ, நேரில் கேட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை. இது ஒரு சிதம்பர ரகசியமாகத்தான் இருக்கிறது. முன்னுக்குப் பின் முரண்பாட்டின் மொத்த உருவம் தான் தவெக அரசு. மேகதாது விவகாரம் குறித்து நிறைய பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டன. எதிலும் தெளிவான தீர்வு எட்டப்படவில்லை. அப்படியிருக்கையில், முதலமைச்சர் விஜய், கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த செல்வது ரீல்ஸ் போடுவதற்குதான் உதவும். அந்த பேச்சுவார்த்தை நீர்த்துதான் போகும். மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய தவெக அரசு, இதுவரை அதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கடந்த 2, 3 மாதங்களாக தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரி நீர் வரவில்லை. அங்கு டெல்டா விவசாயிகள் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, சட்டப்பூர்வமாகவோ, அரசியல் ரீதியாகவோ போராடி, காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்' என ரகுபதி வலியுறுத்தினார்.
மேகதாது விவகாரம்: ஆதவ் அர்ஜுனா பொய் சொல்கிறார் – ரகுபதி குற்றச்சாட்டு

Senior Reporter
Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை
