புதின் சீனா பயணம்: உலக அரங்கில் புதிய அரசியல் நகர்வு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 3 நாள் சீனப் பயணத்தை முடித்த சில மணி நேரங்களிலேயே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அடுத்த வாரம் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கிரெம்ளின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது உலக நாடுகளின் கவனம் ஆசிய கண்டத்தின் மீது திரும்பியுள்ளது. இந்தச் சூழலில், வரும் 19 மற்றும் 20-ந் தேதிகளில் புதின் சீனாவில் தங்கி பல்வேறு உயர்மட்ட ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார்.

முன்னதாக, கடந்த 13-ந்தேதி சீனா சென்ற டிரம்ப், அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசிவிட்டு வாஷிங்டன் திரும்பினார். வல்லரசு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நிலவி வரும் வேளையில், டிரம்ப் புறப்பட்ட உடனே புதினும் சீனாவுக்கு விரைவது சர்வதேச அரங்கில் பெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2001-ல் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க சீன-ரஷ்ய கூட்டாண்மை ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி புதின் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார்.

டிரம்ப் உடனான சந்திப்பில் அமெரிக்கா-சீனா இடையே என்னென்ன ரகசியங்கள் பேசப்பட்டன, அமெரிக்காவின் தற்போதைய நகர்வுகள் என்னென்ன என்பது குறித்தும் ஷி ஜின்பிங்கிடம் புதின் விரிவாகக் கேட்டறிய உள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 2 நாள் பயணத்தின்போது, உக்ரைன் போர் நிலைமை, ஈரான் விவகாரம், மற்றும் உலகளாவிய பிராந்தியப் பாதுகாப்பு குறித்தும் இருவரும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.

பயணத்தின் இறுதியில் இரு நாடுகளும் இணைந்து ஒரு முக்கிய கூட்டுப் பிரகடனத்திலும், வர்த்தக ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் இந்த சந்திப்பை மிகுந்த உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இது உலக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version