தமிழ்நாட்டில் விபச்சார விடுதிகளுக்கு அனுமதி: மஎஜக தலைவர் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த, அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் இயங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் பரபரப்பு கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இத்தகைய குற்றங்களைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.

கும்மிடிபூண்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்று வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகவும், மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த காயல் அப்பாஸ், தமிழக அரசு உடனடியாக ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, சாகும் வரை சிறையில் அடைத்தால் மட்டுமே இது போன்ற கொடூரமான பாலியல் குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் சோனா காச்சி மற்றும் மும்பையில் கிரண் சாலை போன்ற இடங்களில் அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும், அந்த மாநிலங்களில் பாலியல் குற்ற சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல் தமிழ்நாட்டின் முக்கிய மாநகரங்களில் அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் இயங்கினால் பாலியல் குற்ற சம்பவங்களைக் குறைக்க முடியும் என காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார். சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version