தமிழக அரசின் கருவூலத்திற்கு கடந்த மூன்று மாதங்களில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு ஆகியவை இந்தத் தொகையில் அடங்குமா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, ஆட்சேபனைகள் தெரிவிக்க முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி, தற்போது சொத்து வரி உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'சென்னை மாநகராட்சியில் திடீரென உயர்த்தப்பட்ட சொத்து வரி, பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற அரசு முயல்கிறதா?'
மேலும் அவர், 'மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, வரிவிதிப்பு நிலைக்குழுவின் வழிமுறைகளின்படி உயர்த்தப்பட வேண்டிய சொத்து வரி, எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டது எப்படி? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே தெரியாமல் சொத்து வரியை உயர்த்துவதற்கான அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்கிருந்து வந்தது?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
'ஏற்கனவே, மறைமுக மின் கட்டண உயர்வால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சென்னை மாநகரில் சாதாரண நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு இணையாக வரி மதிப்பீடு செய்து, அவர்களுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முயல்வது எந்த வகையில் நியாயம்?' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'தமிழக அரசு பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கருவூலத்திற்கு வந்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருக்கும் நிலையில், இதுபோன்ற மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு ஆகியவையும் அந்தத் தொகையில் அடங்குமா?' என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, சொத்து வரி விதிப்பில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்டிருக்கும் நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்யவும், கூடுதலாக சொத்து வரி வசூலிக்கப்பட்ட அனைவருக்கும் அந்தத் தொகையை உடனடியாகத் திருப்பி வழங்கவும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்' என்று டிடிவி தினகரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

