தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்: மகளிர் இலவச பயணத்தால் பாதிப்பு?

தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ்

தமிழக அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் விரிவுபடுத்தப்படும் அறிவிப்பைத் தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செப்.28) தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படும் நிலையில், தனியார் பேருந்துகளிலும் அதே நடைமுறையைச் செயல்படுத்தாவிட்டால் தனியார் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும். இதனால் தனியார் பேருந்துகளைச் சார்ந்துள்ள சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

மேலும், 'அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தனியார் பேருந்துகளிலும், பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இலவசப் பயணத்தால் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகளுக்கு மானியத்தை வழங்க வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், செப்.30-ஆம் தேதி நள்ளிரவு 12.01 முதல் இரவு 11:59 வரை 24 மணி நேரம், மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். இதனால், தனியார் பேருந்துகளை நம்பிப் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஆகஸ்ட் 24-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், 'தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இந்த அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 02-ஆம் தேதி முதல் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும், மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தார்.

மேலும், மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்ச வரம்போ அல்லது பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை என்றும், திருநர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்றும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version