திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள காரையாறு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோயிலில், பக்தர் காணிக்கையாக வழங்கிய பஞ்சலோக டாலரை பூசாரி ஒருவர் அபகரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் ஸ்ரீ பூர்ணா சிற்பக்கலை கூடத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர், காரையாறு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருவுருவம் பொறித்த பஞ்சலோக டாலர் மாலையை கோயிலில் பணிபுரியும் பூசாரி ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த காணிக்கை தொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பூசாரி, அந்த பஞ்சலோக டாலரை முறைகேடாக திருடி அணிந்து கொண்டுள்ளார். கடந்த 12 ஆம் தேதி, ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தாமோதரன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது, அந்த பூசாரி பஞ்சலோக டாலரை அணிந்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கப்படாததால், பக்தர் தாமோதரன் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். காணிக்கையாக வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற பஞ்சலோக டாலரை பூசாரி அபகரித்தது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், கோயில்களில் பக்தர்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தும் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. பக்தர்களின் நேர்மையான காணிக்கைகள் உரிய முறையில் கையாளப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

