கணவர் கொலை: மனைவி மற்றும் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு

காவல் உதவி ஆய்வாளர் ராஜ் கொலை சம்பவம் தொடர்பான விசாரணை

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜ், தனது மனைவியாலும், அவரது கள்ளக்காதலனாலும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயதான ராஜ், 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று, சென்னை மாநகர காவல்துறையின் ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ராஜ், தன்னைவிட 26 வயது இளையவரான 32 வயது செல்வராணியை திருமணம் செய்து கொண்டு, சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, ராஜ் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அன்று இரவு, செல்வராணியும் குழந்தைகளும் வீட்டின் முதல் மாடியில் தூங்கச் சென்றனர். ராஜ் மட்டும் கீழ்தளத்தில் உள்ள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது. மாலை சுமார் 4 மணியளவில் ராஜ் இருந்த அறையில் இருந்து திடீரென புகை வெளியேறியுள்ளது. இதைப் பார்த்த செல்வராணி கீழே வந்து பார்த்தபோது, ராஜ் தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வராணி அளித்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, ராஜ் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். மேலும், ராஜ் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் இருந்ததால், அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் செல்வராணி போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

ஆனால், ராஜின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது, போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்தன. ராஜின் உடலில் அதிக அளவு தூக்க மாத்திரைகள் இருந்ததற்கான அறிகுறிகளும், கழுத்துப் பகுதியில் இறுக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், ராஜ் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற தேவா என்பவருடன் அவர் பலமுறை தொலைபேசியில் பேசியிருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து செல்வராணியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, தனது கணவரை தேவாவின் உதவியுடன் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் கூறிய தகவலின்படி, செல்வராணி தனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதாகவும், முதல் கணவர் மூலம் ஒரு மகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் தன்னையும் தனது மகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததால் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்ததாகவும், சுமார் 10 ஆண்டுகளாக தங்களுக்குள் பெரிய பிரச்சனை இல்லாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜ் தன்னை சட்டப்படிப்பு படிக்க வைத்ததாகவும், பின்னர் அவருக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் செல்வராணி கூறியுள்ளார். ராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், தாம்பத்திய வாழ்க்கையிலும் விலகி இருந்ததாகவும் செல்வராணி போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் செல்வராணி வழக்கறிஞராக பணியாற்றி வந்த தேவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி நெருங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர்பு ராஜுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, தேவாவுடன் தொடர்பை துண்டிக்குமாறு ராஜ் கண்டித்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தேவா வீட்டிற்கு வந்து செல்வது ராஜுக்கு தெரிய வந்ததால், அவர் வீட்டின் அருகே சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வந்ததாகவும் செல்வராணி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று குடும்பத்துடன் புறைசைவாக்கம் சென்று குழந்தைகளுக்கு துணிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியதாகவும், அப்போது தேவா கொடுத்ததாக கூறப்படும் தூக்க மாத்திரைகளை சாப்பாட்டில் கலந்து ராஜுக்கு கொடுத்ததாகவும் செல்வராணி தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

சாப்பிட்டுவிட்டு ராஜ் தூங்கிய பின்னர், தேவாவுக்கு தகவல் தெரிவித்து அவரை வீட்டிற்கு வரவழைத்ததாகவும், பின்னர் இருவரும் சேர்ந்து ராஜின் கழுத்தை துணியால் இறுக்கியதாகவும், தொடர்ந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தேவா இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், செல்வராணி மேல்மாடிக்கு சென்று குழந்தைகளுடன் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் ராஜின் அறையில் இருந்து புகை வருவதாகக் கூறி, குழந்தைகளுடன் கீழே வந்து பார்த்ததாகவும், ராஜ் தற்கொலை செய்து கொண்டது போல் சம்பவத்தை சித்தரித்ததாகவும் செல்வராணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, பரிசோதனை அறிக்கை, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் தொடர்புகள் உள்ளிட்ட தடயங்களின் அடிப்படையில், செல்வராணியை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தேவாவை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version