தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ஒரு புதிய தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Internal Vigilance Cells அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் நேர்மையை உறுதி செய்வதையும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பதாகும். ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், ஒழுங்கீனம் போன்ற எந்தவொரு செயல்கள் குறித்தும் பொதுமக்கள் இங்கு புகார் அளிக்கலாம்.
பொதுமக்கள் தங்கள் புகார்களை எளிதாகத் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரத்திற்கும் தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியைப் பயன்படுத்தி, பொதுமக்கள் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்த குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பெறப்படும் அனைத்துப் புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில், உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன் மூலம், காவல்துறையில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் உறுதி செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி, காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் என டிஜிபி/HoPF கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புதிய பிரிவு, ஊழலற்ற காவல் துறையை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

