தஞ்சையில் வீட்டில் தூங்கிய பெண்கள்.. 8½ பவுன் நகை திருட்டு!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட முயன்றவர்களைத் தடுக்க முயன்ற குடும்பத் தலைவர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தப்பட்டுள்ளார்.

முதல்சேரி காலனியைச் சேர்ந்த மைக்கேல் நவீன் என்பவரின் வீட்டில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, மைக்கேல் நவீன் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது தாயார் தவசிமேரி மற்றும் மனைவி இவாஞ்சலின் ஆகியோர் மற்றொரு அறையில் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், இவாஞ்சலின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியையும், தவசிமேரியின் கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துள்ளனர்.

பெண்களின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக மைக்கேல் நவீன் விழித்து, திருடர்களைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், மர்மநபர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் மைக்கேல் நவீனின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். வீடு புகுந்து திருடிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version