பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல பெயர்களில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ராஜ அலங்காரம், வள்ளி தெய்வானை, குகன், கதிர்வேலகம், கடம்பன், சண்முகர், வடிவேலகம், கந்தன், கார்த்திகேயன் போன்ற பெயர்களில் இல்லங்களும், மேலும் சின்ன குமாரர் விடுதி, வேலவன் விடுதி, இடும்பன் குடில், குறிஞ்சி விடுதி போன்றவையும் பக்தர்களுக்கு தங்குமிட வசதியை அளித்து வருகின்றன. இந்த விடுதிகளில் உள்ள அறைகளுக்கு இதுவரை ரூ.300 முதல் ரூ.2500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் இந்த கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது அறைகளுக்கான கட்டணம் ரூ.600 முதல் ரூ.4000 வரை என கோயில் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது கந்தன் இல்லம் மற்றும் இடும்பன் குடில் ஆகியவை இடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், மீதமுள்ள விடுதிகளில் மட்டுமே பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், போதுமான அறைகள் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள், தனியார் விடுதிகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விடுதி கட்டணமும் இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வு முடிவை கோயில் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக விடுதி கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாலும், விடுதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காகவும் இந்த கட்டண உயர்வு அவசியமாகிறது என்றும் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, ஜூலை 13 ஆம் தேதி முதல் கார்த்திகேயன் விடுதியில் உள்ள 25 அறைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், பக்தர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தங்களுக்குத் தேவையான அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த புதிய வசதி, அறைகள் கிடைப்பதில் உள்ள சிக்கலை ஓரளவு தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

