பழனி கோயில் நில மோசடி: மேலிடப் புள்ளி யார்? – கிருஷ்ணசாமி கேள்வி

பழனி கோயில் நில மோசடி குறித்துப் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த 1.40 ஏக்கர் நிலம், ₹100 கோடிக்கும் மேல் மதிப்புடையது.

இந்த நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்தது எப்படி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே மூன்று தனிநபர்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? இரவுகளில் கன்னக்கோல் போடுவது, வீடு புகுந்து திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது போன்ற குற்றச் செயல்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இது முற்றிலும் வேறுபட்ட, அதிர்ச்சியளிக்கும் ஒரு மோசடி' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்குச் சார்பதிவாளர் மணிகண்டன் உடந்தையாகச் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

இந்தக் குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை.

முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது. எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமான விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் (Sitting Judge) கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version