பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவில் பெரும் சதி நடந்துள்ளதாக திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'பழனிக்குச் செல்பவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை போடுவது வழக்கம். ஆனால், இன்று பழனிக்கே 'மொட்டை' போட்டிருக்கிறது தவெக ஆட்சி' என விமர்சித்தார்.
முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட நிலப் பரிமாற்றத்தை நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்துள்ளதாகவும், தமிழக அரசு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பரந்தாமன் குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்களை நள்ளிரவில் கைது செய்யும் காவல்துறை, தவறுதலாக நிலத்தை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் ஏன் இதுவரை கைது செய்யவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
'விஜய்யின் முதுகுக்கு பின்னாலே புரையோடிப்போன ஊழல் நடந்துள்ளது' என்றும் அவர் கூறினார். பழனிக்கு அருகே உள்ள சார் பதிவாளரை அழைக்காமல், சுமார் 67 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒருவரை அழைத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருந்த நிலையில், ஒரே ஒரு நாள் மட்டும் பணிக்கு வந்திருந்த சிட் ஃபண்ட் துணை சார்பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டனை வரவழைத்து, திட்டமிட்டு இந்த ஊழல் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் பரந்தாமன் தெரிவித்தார்.
பழனி சார்பதிவாளர் ஏன் விடுமுறையில் சென்றார்? ஒரே ஒரு நாள் மட்டும் பணிக்கு வந்த பதிவாளர் அவசர அவசரமாக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பதிவு செய்தது ஏன்? என்றும் அவர் கேள்விகளை முன்வைத்தார். இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

