இந்தியாவை முந்துவதே இலக்கு – பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன்

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கருதுவதாகவும், அவர்களை முந்திச் செல்வதே தங்களது முக்கிய இலக்கு என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் தெரிவித்துள்ளார். மேலும், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள தங்களால் முடிந்த சிறந்த முறையில் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மைக் ஹெஸன், சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய கடந்த ஆறு போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 2025 ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் மூன்று முறை மோதியதில், அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தான் மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளது. அவர்களை எட்டிப்பிடிப்பதே எங்கள் முன்னால் உள்ள சவால் என்று மைக் ஹெஸன் கூறினார். மேலும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நாங்கள் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது போல, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது இந்திய அணிக்கு சவால் அளிக்க எங்களை நாங்கள் சிறந்த முறையில் தயார்படுத்தி வருகிறோம்.

எனினும், இறுதிப் போட்டிக்கு இன்னும் பல போட்டிகளைக் கடக்க வேண்டியுள்ளதால், நாங்கள் தற்போதைக்கு அடுத்தடுத்த ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மட்டுமே நேருக்கு நேர் மோத முடியும் என்ற சூழல் உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியாவைப் போலல்லாமல், முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு சாஹிப்ஸாதா ஃபர்ஹான் தலைமையிலான இரண்டாவது தர அணியை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த அணி வலிமையானது என்று மைக் ஹெஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது மிகவும் சமபலமும் ஆக்ரோஷமும் கொண்ட ஒரு அணியாகும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் புதிய மற்றும் திறமையான இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளமாக அமையும். குறிப்பாக, சாஹிப்ஸாதா ஃபர்ஹானுக்கு கேப்டனாக அனுபவத்தைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாகும், என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு தான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, அந்த அணி குரூப் சுற்றுகளைக் கடப்பதற்கே கடுமையாகப் போராடி வந்தது என்று ஹெஸன் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருப்பது இயல்பானது தான் என்றாலும், தொடக்கத்தில் இருந்து உடனடியாக கோப்பைகளை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் தங்களது அணியின் தற்போதைய நிலையை விளக்கினார். இந்தியா எங்களை அடித்து நொறுக்கிவிடும் என நினைத்தோம்.. இப்படி ஒரு போட்டியை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியாவை ஒரு பெஞ்ச் மார்க்காகக் கொண்டு, அவர்களை முந்துவதே தங்களது இலக்கு என பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version