ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்: பா.ரஞ்சித் வலியுறுத்தல்

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சாத்தங்குடி கிராமத்தில் நடந்த கொடூரமான இரட்டைக் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு தோப்பு ஒன்றில் உள்ள கொட்டகையில் தூக்கிலிடப்பட்டுக் கிடந்தனர். பெண்ணின் பெற்றோர், காணவில்லை எனப் பொய்யான புகார் அளித்ததும், பெண்ணின் சித்தப்பா அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி வரவழைத்துக் கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை லட்சுமி காந்தன், சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜி ஆகியோர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், தொடரும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஆட்சியாளர்கள் உணர்ந்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை ஏற்க மறுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆணவப் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த கும்பலை கைது செய்வதோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பார்த்திபன் குடும்பத்திற்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version